எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு அவையின் கண்ணியமிக்க செயல்பாட்டுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குசு. வெங்கடேசன் எம் பி கடிதம் எழுதியுள்ளார்.
பெருமதிப்பிற்குரிய மக்களவைத்தலைவர் ஓம்பிர்லா அவர்களே! வணக்கம். நேற்று அவை உறுப்பினர்களுக்கு நீங்கள் எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்குவதாக உள்ளது.
“டிசம்பர் 13ஆம் தேதி நடந்த சம்பவத்திற்கும் அவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியுள்ளீர்கள். ஒரு சபாநாயகராக நீங்கள் எடுத்த நடவடிக்கையின் நியாயத்தை விளக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் நாங்கள் நடத்திய போராட்டத்தின் நோக்கத்தை மறைக்க முயல்வது அபத்தமானது.
நாங்கள் அவையில் போராடியதற்காகத்தான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளோம், எதற்காகப் போராடினோம்? 13ஆம் தேதி நிகழ்வு குறித்து உள்துறை அமைச்சர் அவைக்கு விளக்க வேண்டும் என்று கேட்டோம். இந்தக் கோரிக்கை, பாதுகாப்பின்மையால் சீர்குலைக்கப்பட்ட அவையின் மாண்பை கூட்டுணர்வோடு சரிசெய்ய வழியுறுத்தும் செயலாகும்.
உள்துறை அமைச்சர் ஊடகச் சந்திப்பில் இது குறித்து பேசுகிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் பேசத் தயாராக இல்லை. இந்த அரசு நாடாளுமன்றத்தை மதிக்கும்விதம் இதுதானா? நீங்கள் நாடாளுமன்றத்தில் அவர் பேசுவதற்கான அழுத்தத்தை தந்திருக்கலாம். கடந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் பிரச்சினையில் அந்த மாநிலம் பற்றியெரிந்த நேரத்திலும் பிரதமர் பேச
மறுத்தார். அதானியின் பங்குச்சந்தை ஊழல் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை.
நாடாளுமன்றக்குழுவின் விசாரணைக்குக் கடைசி வரை அரசாங்கம் தயாராக இல்லை, இந்த தேசத்தின் உயர்மட்ட அரசியல் தலைமையை “தேச முக்கியத்துவம்” வாய்ந்த பிரச்சினைகளில் நாடாளுமன்றத்தில் பேசவைக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு என்னதான் வழி இருக்கிறது? நாடாளுமன்ற ஜனநாயகம் விவாத செயல்பாட்டினூடே, துடிப்புமிக்கதாக மாறுகிறது.
அதன் துடிப்பை நிறுத்தும் நோக்கங்க்கொண்டதுதான் விவாதத்தை மறுப்பதென்பதும்,தவிர்ப்பதென்பதும்,அவையின் புனித்தை நிலைநிறுத்துவதற்காகவே எங்களை இடைநீக்கம் செய்ததாக கூறியுள்ளீர்கள். இது அருவருக்கத்தக்க கூற்று. புனிதத்தைக் காக்க போடப்பட்ட சாம்பிராணிப்புகைதான் அந்த மஞ்சள்வண்ணப்புகையா சபாநாயகரே? புனிதத்தைக்காக்க பாஸ் கொடுத்தவரை இனி புனிதர் என்று அழைக்கத் தீர்மானம் கொண்டுவரலாமா? உங்களின் விசுவாசம் உண்மைக்கு எதிரானதாக அம்பலப்பட்டு நிற்கிறது.
உங்களின் கடிதத்தில் கடந்த காலத்தில் நடந்த முறையற்ற அத்துமீறல்களை எல்லாம் விரிவாக பட்டியலிட்டுள்ளீர்கள். அதுபோன்ற சம்பவங்கள் நடந்த போதெல்லாம் அவை முன்மாதிரியான ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளீர்கள். அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். கடந்த காலத்தில் நடந்த அத்துமீறல்களைப் போலவே 13ஆம் தேதியும் நடந்தது. பகல் 1.30 மணிவரை அந்தச் சம்பவம் அவையில் நடந்து பெரும்கலோபரம் ஏற்பட்டது.
நாடே அலறுவதைப்போல ஊடகங்களில் இந்தச் செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. ஆனால் எதுவுமே நடக்காததைப்போல் நண்பகல் 2 மணிக்கு அவையைக் கூட்டி போஸ்ட் ஆபீஸ் மசோதவை விவாத்துக்கு எடுத்து அவையை நடத்தினீர்களே ஏன்?.
வீசப்பட்ட புகையின் நெடி அவையைவிட்டு மறையவில்லை, எந்தத் தடயவியல் நிபுணர்களும் அவைக்கு வரவழைக்கப்படவில்லை.
ஆனால் எதுவுமே நடக்காதுபோல காட்டிக்கொள்ள அவ்வளவு மெனக்கிட்டீர்களே எதற்காக? நாங்கள் அன்றைக்குப் போராடியதன் விளைவாகத்தான் முறையான விசாரனை மேற்கொள்ள அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இன்று உங்களின் கடிதத்தில் எதுவெல்லாம் செய்யப்பட்டது.
என்று நீங்கள் கூறியுள்ளீர்களோ அவை அனைத்தும் எங்களின் போராட்டத்திற்கு பின்னர் நடந்தவைகளே..
அவைக்கு “கோரிக்கை அட்டைகளைக் கொண்டுவருவது”, “அவையின் மையப்பகுதியில் திரள்வது” ஆகியவற்றை தவிர்க்க உறுதிபூண்டுள்ளதாகக் கூறி உள்ளீர்கள். மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே! நீங்கள், பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களின் கவனத்தை ஈர்க்க மையப்பகுதிக்கு திரண்டு சென்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? கோஷங்களை எழுப்பவில்லையா? பதாகைகள் ஏந்தவில்லையா? பாஜக எழுப்பிய கோரிக்கைகளில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும் உறுப்பினர்களின் உரிமை என்ற முறையில் அதனை ஆதரித்தே நிற்கிறோம்.
புதிய நாடாளுமன்ற கட்டித்தைத் திறந்து மிக உயர்ந்த தரத்தை நிலைநாட்டுவதைப் பற்றியெல்லாம் உங்களின் கடிதத்தில் பேசியுள்ளீர்கள், வேதனைகொள்கிறோம் சபாநாயகரே, இந்திய நாடாளுமன்றத்தின் தலைவர். குடியரசு தலைவரே, கூட்டத்தொடருக்கான அழைப்பாணை
உறுப்பினர்களாகிய எங்களுக்கு அவரிடமிருந்தே வருகிறது.
ஆனால் அவரை அழைக்காமலே நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை திறந்தீர்கள். அவைக்கு நடுவில் “வெல்” என்று சொல்லப்படும் மையப்பகுதியை நான்கு அடிக்கு பள்ளமாக வைத்துள்ளீர்கள். உலகின் எந்த நாடாளுமன்றத்திலும் இப்படியொரு அவலச்செயல்பாடு நடந்திருக்காது.
உறுப்பினர் திரு. டேனிஷ் அலி குறித்து திரு. ரமேஷ் பிதுரி பேசிய நாகரிகமற்ற அவமானகரமான வார்த்தைகள்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கொடுக்கப்பட்ட கடிதங்கள் உங்களின் மேசையில் தூங்குகின்றன. ஆனால் நீங்களோ உயர்ந்த தரத்தை நிலைநாட்டுவதாக பெருமைப்பட்டுக்கொள்கிறீர்கள்,
பத்து நிமிடத்தில் பதினோரு சட்டத்தை நிறைவேற்றிய அவையல்லவா இது. இன்றளவும் ஒரு விவாத்தைக்கூட முழுமையாக அமர்ந்து கேட்காத ஒரு பிரதமரைத்தான் இந்த அவை பெற்றுள்ளது. இன்றனவும் ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்லாத பிரதமரைத்தான் இந்த அவை பெற்றுள்ளது. இவையெல்லாம் இந்த அவையின் பெருமைகளில் அடங்குமா சபாநாயகரே?
இவ்வளவு சிறப்புள்ள இந்த அவைக்குப் பெருமை சேர்க்க இப்பொழுது நீங்கள் மற்றுமோர் உண்மையை கண்டறிந்துள்ளீர்கள், “எங்களின் இடைநீக்கம் சபையின் மாண்பை நிலைநிறுத்துமென்று”, நாடாளுமன்றப் பாதுகாப்புக்குழு கடந்த ஐந்தாண்டுகளில் ஒருமுறைகூட கூடவில்லை. உறுப்பினர்கள் நினைவூட்டியும் இது நடைபெறவில்லை.
இதுகுறித்து உங்களின் கடிதத்தில் எதுவும் கூறவில்லை. இதற்கான பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு. எனவே, பதிலளியுங்கள் என்று உறுப்பினர்கள் எழுப்பும் கேள்வியும் அதற்கான போராட்டமுந்தான் அவையின் மாண்பை நிலைநிறுத்தக் கூடியது.கடைசியாக ஒரு முக்கியமான கேள்வி எஞ்சி இருக்கிறது. உங்களின் கடிதத்தில் ஒரு வரிகூட “அனுமதிச்சீட்டு” வழங்குவதில் எம்பிக்கள் எடுக்க வேண்டிய கவனங்குறித்த விமர்சனமாகவோ, அறிவுறுத்தலாகவோ இல்லையே.
ஏன்? அவையில் ஊடுருவிய நபருக்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு இருந்தால் பொய்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் எவ்வளவு பொய்களை உற்பத்திசெய்து நாடெங்கும் விநியோகித்திருப்பார்கள். எங்களுக்கு அறிவுரையும் தேசபற்றையும் வழியுறுத்தி உங்களின் கடிதம் எத்தனையோ பக்கங்கள் நீண்டிருக்கும்.
ஆனால் இப்பொழுது உங்களின் கடித்தில் அதுகுறித்து ஒற்றைச் சொல்கூட இடம்பெறவில்லை.
சபாநாயகரே, அவையின் கண்ணியமிக்க செயல்பாட்டுக்கு யாரும் விதிவிலக்கல்லர் என்பதை மக்கள் அறிவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.