முதுமலை வனப்பகுதியில் T23 புலிக்கு மயக்க ஊசி போடப்பட்ட நிலையில், புலி தப்பித்து புதர் பகுதிக்குள் பதுங்கியதால், 19ஆவது நாளாக தேடுதல் வேட்டை தொடர்கிறது.
போஸ்பரா பகுதியிலிருந்து நம்பிகுன்னு வனப்பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பது தானியியங்கி கேமராவில் பதிவானதை தொடர்ந்து வனத் துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
19-வது நாளாக வனத்துறைக்கு “தண்ணீ” காட்டி வரும் T-23 புலி, நேற்று முதுமலை போஸ்பரா வனப்பகுதியில் கண்டறியப்பட்டு நேற்று மயக்க ஊசி செலுத்தப்பட்டதில், புலி அடர்ந்த புதருக்குள் பதுங்கி சென்றது. மேலும் போதிய வெளிச்சமின்மை காரணமாக தேடுதல் வேட்டை முடிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை 6 மணியளவில் புலியின் நடமாட்டம் குறித்து போஸ்பரா, நம்பிகுன்னு, மண்வயல் மற்றும் கார்குடி ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கேமராக்களை ஆய்வு செய்ததில்,
தற்போது போஸ்பரா வனப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து நம்பிகுன்னு வனப் பகுதியில் நடமாடி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வன கால்நடை மருத்துவர்கள் புலி நடமாடும் வனப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இதனால் புலி நடமாடும் போஸ்பரா மற்றும் நம்பிகுன்னு ஆகிய பகுதிகளுக்கு வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றியுள்ள தேவன் எஸ்டேட், மசினகுடி பகுதிகளில் 4 பேர் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாடுகளை வேட்டையாடிய T23 புலியை பிடிக்க வனத்துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.
ஆனால் 5 நாட்களாக புலியின் கால் தடங்கள் தெரியாமல் சிங்கார வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினர் புலியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இதனை அடுத்து நேற்று முன்தினம் முதல் மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட பொக்காபுரம் மற்றும் மாயார் பகுதிகளில் நான்கு குழுக்கள் அந்த இரண்டு வனப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சிறிய பள்ளங்கள், நீரோடைகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள முட்புதர்கள், மூங்கில் புதர்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் 65 இடங்களில் வைக்கப்பட்ட தானியங்கி சென்சார் கேமராக்களில் இந்த புலி பதிவாக நிலையில் நேற்று காலை கூடலூர் அருகே போஸ்பாரா பகுதியில் கண்காணிப்பு கேமிராவில் சிக்கியது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து சென்று அப்பகுதி மக்களை வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் நேற்று 2 மணியளவில் அத்திகுன்னு மற்றும் முதுகுழி வனப்பகுதியில் புலி தென்ப்பட்டதால் அப்பகுதிகளுக்கு 4 வன கால்நடை மருத்துவர் குழு மற்றும் வனதுறையினர் விரைந்தனர்.
மாலை 5 மணிக்கு புலியை சுற்றி வலைத்த வனத்துறையினர். புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். ஆனால் அதிலிருந்து புலி தப்பி அருகில் இருந்த புதர் பகுதிக்கு சென்று மறைந்துக்கொண்டது.
போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தேடுதல் பணி நிறைவடைந்தது. இந்நிலையில், பொதுமக்கள் கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்று முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். T23 புலி தொடர்ந்து ஒவ்வொரு பகுதிக்குள் இடம்பெயர்ந்து பதுங்கிகொள்வதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.