தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான விஸ்வா தீனதயாளன், உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான விஸ்வா தீனதயாளன் மாநில மற்றும் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பங்கேற்று பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பி.காம் படித்த விஸ்வா தீனதயாளன் ஷில்லாங்கில் இன்று தொடங்கும் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கௌஹாத்தியில் இருந்து சக போட்டியாளர்களுடன் காரில் சென்றுள்ளார்.
இந்த நிலையில், ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த 12 சக்கரங்களுடன் கூடிய டிராய்லர், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது. இதில் காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஸ்வா தீனதயாளன் நோங்போ சிவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விஷ்வாவுடன் பயணித்த ரமேஷ் சந்தோஷ்குமார், அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன், கிஷோர் குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். தீனதயாளனின் உடல் இன்று காலை சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது.
ஏப்ரல் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் விஸ்வா தீனதயாளன் பங்கேற்க இருந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீனதயாளன் மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். விஷ்வாவின் மறைவுக்கு மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.