கேபிள் டிவி கட்டண உயர்வு முடிவை கண்டித்து மதுரையில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் (cable tv operators) பொதுநலச்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் (cable tv operators) பொதுநலச் சங்கம் சார்பில் மத்திய அரசின் கீழ் செயல்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும்,
தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் பயன்படுத்தும் கேபிள் வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு கேபிள் டிவி கட்டணத்தை 300 ரூபாயிலிருந்து 500 வரை ரூபாய்க்கு மாற்றி மார்ச் முதல் அமல்படுத்த உள்ளதை கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட தலைவர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தைச் சார்ந்த ஆபரேட்டர்கள் பங்கேற்றனர்.
இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி 5 பேர் மட்டுமே செல்ல அனுமதி உள்ளது என கூறினர்.
இதனையடுத்து, சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுவை வழங்கினர்.