Annamalai warning to DMK government : தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது.
தமிழகத்தில் குற்றச் செயல்களையும், போதைப் பொருள்கள் புழக்கத்தையும் இனியும் கட்டுப்படுத்தவில்லை என்றால், பெரும் எதிர்விளைவுகளை தி.மு.க. எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழகம் முழுவதும் குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கின்றன.
ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வரி மாறாமல் வாசித்து விட்டுச் செல்கிறார்.
முதல்-அமைச்சர் உண்மையில் செய்திகளைப் படிக்கிறாரா அல்லது அவருக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அதிகாரிகள் தெரிவிக்கிறார்களா என்பது கூடத் தெரியவில்லை.
குறிப்பாக, தலைநகரம் சென்னை, கொலை நகரமாகவே மாறிவிட்டது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் குற்றங்களுக்குப் பழி தீர்க்கும் இடமாக, சென்னை மாறியிருக்கிறது.
சென்னையின் பரபரப்பான சாலைகளில், பொதுமக்கள் மத்தியில், ஓடஓட விரட்டிக் கொல்வது என்பது சாதாரண ஒரு நிகழ்வாக மாறியிருக்கிறது. கொலைக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : நெல்லை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் – வைகோ கண்டனம்!
தாங்கள் செய்யும் குற்றத்திற்கான விளைவுகளை எண்ணிப் பார்க்கும் நிலையில் கூட அவர்கள் இல்லை. பெருகி இருக்கும் கஞ்சா புழக்கத்தினால் இளைஞர்களை அடிமையாக்கி குற்றச் செயல்களில் கூலிப்படையாகச் செயல்பட தூண்டப்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தி.மு.க. அரசு கண்டும் காணாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
நேற்றைய தினம் தமிழக பா.ஜனதா மகளிர் அணியின் மாநிலப் பொதுச் செயலாளர் வக்கீல் நதியாவின் கணவர் சீனிவாசன் மீது கூலிப்படையினரை கொண்டு கொலை வெறித் தாக்குதல் நடந்திருக்கிறது.
தி.மு.க.வின் மூன்று ஆண்டு கால அலங்கோல ஆட்சியில், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க முடியவில்லை (Annamalai warning to DMK government).
இவை பல மடங்கு அதிகரித்திருக்கின்றன.இவை குறித்து எதுவும் அறியாமல், துண்டுச் சீட்டைப் பார்த்து, நாங்கள் நம்பர் ஒன் என்று கனவுலகில் இருக்கும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை, தூக்கத்தில் இருந்து யாரேனும் தட்டி எழுப்ப வேண்டும்.
தமிழகத்தில் குற்றச் செயல்களையும், போதைப் பொருள்கள் புழக்கத்தையும் இனியும் கட்டுப்படுத்தவில்லை என்றால், பெரும் எதிர்விளைவுகளை தி.மு.க. எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” எனக் கூறி உள்ளார்.