திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களில் மது விற்பனை செய்வதற்க்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், திருமண மண்டபங்கள்,விருந்து அரங்குகள், வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும்,
மதுபானம் பரிமாறுவதற்கு விதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், “திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம்.
இதற்கு மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு துணையானையர் சிறப்பு அனுமதியை வழங்குவார்கள். பி.எல் 2 எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மது விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.இதனால் டாஸ்மாக்கை தவிர பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த மதுபானங்கள் இனி திருமணங்கள் மற்றும் விளையாட்டு கூடங்களிலும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்,திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களில் மது விற்பனை செய்வதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள்.
மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ள இந்த திராவக மாடல் அரசு,பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி என தெரிவித்துள்ளார்.