தமிழ்நாடு – ஆந்திர எல்லையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 14.5 கிலோ தங்க நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள ஏலாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் காவல்துறையினர் வழக்கமாக சோதனையில் ஈடுபடுவது வழக்கம். இங்கு, ஆந்திராவில் இருந்து கஞ்சா, வட மாநிலங்களில் இருந்து குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தமிழ்நாட்டில் கடத்தப்படுவதை தடுக்க தீவிர சோதனை நடக்கும்.
இதே போல, தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி, கோதுமை உள்ளிட்ட விநியோகப் பொருட்கள் கடத்தலை தடுக்கவும் தீவிர சோதனை நடைபெறுவது வழக்கம். திருவள்ளூர் மாவட்ட காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல்துறையினர், திட்டமிட்ட போதை பொருள் நுண்ணறிவு துறை காவல் துறை என பல்வேறு பிரிவு அடங்கிய போலீசார் சோதனைகளில் ஈடுபடுவது வழக்கம்.
இன்று, சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் ஏலாவூர் சோதனை சாவடியின் முன்பு வழக்கம்போல ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்தில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அதில், இருவர் கொண்டு வந்த பையில் தங்க நகைகள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல கோயம்புத்தூர் நகைக்கடையைச் சேர்ந்த ஊழியர்கள் சரவணன், காளிமுத்து எனவும் சேலத்தில் உள்ள நகைக்கடைக்காக சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 14.5 கிலோ தங்க நகைகளை கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர்.
கடையின் மேலாளர் சரவணன் இவர்களிடம் மாடல் நகைகளை கொடுத்து விசாகப்பட்டினத்திற்கு சென்று ஆர்டர் எடுத்து வரும்படி அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து இது குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.