பக்ரீத் பண்டிகை எனும் ஈகத் திருநாளில் சமூகநல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்திட இந்நாளில் உறுதியேற்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்(thirumavalavan) தெரிவித்துள்ளார்.
இறைவனின் கட்டளையை ஏற்று தனது மகனை இறைவனுக்காக அர்ப்பணிப்பதற்காக துணிந்த இறைத்தூதர் இப்ராகிமின் தியாகத்தை போற்றும் இஸ்லாமியர்களின் தியாகத்திருநாளாம் ஈதுல் அல்ஹா எனும் பக்ரித் பண்டிகையை உலக முழுவதிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில்,பக்ரீத் பண்டிகை எனும் ஈகத் திருநாளில் இசுலாமியப் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்’இறைக்கு மட்டுமே அஞ்சுதல் வேண்டும்; வேறு எதற்கும் அஞ்சேல் ‘ என்பது முதன்மையான- அடிப்படையான இஸ்லாமிய கோட்பாடுகளுள் ஒன்றாகும். இறையச்சம் மானுடமேம்பாட்டுக்குத் தேவையென வலியுறுத்தும் இஸ்லாம், அதனையொட்டி ‘இறைவனை மட்டுமே வணங்குதல் வேண்டும்; வேறு எதனையும் வணங்கேல்’ எனவும் வலியுறுத்துகிறது.
அதாவது, அஞ்சுவதும் வணங்குவதும் இறையை மட்டுமே என்பதை இஸ்லாம் அழுத்தமாக கூறுகிறது. அதனை பண்பாட்டுக் கூறுகளினூடாக இன்றும் விளக்குகிற ஒரு பெருவிழாதான் பக்ரீத் பண்டிகையாகும்.
நபிகள் நாயகத்துக்கும் முன்னோடிகளாக விளங்கிய நபிகளுள் ஒருவர் இப்ராஹிம் நபி ஆவார். இறைத்தூதர்களுள் ஒருவரான இப்றாஹிம் அவர்களின் இறையச்சத்தை இறைவன் சோதித்தப் பின்னணியாக நினைவுக்கூர்வதே பக்ரீத் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
இறைத்தூதர் இப்றாஹிம் அவர்கள் இறைவனின் அசரீரி ஆணையைக் கேட்டு இறையச்சத்துடன் தனது குழந்தையைப் பலிகொடுக்க – ஒரே மகனையும்
ஈகம் செய்ய துணிந்தாரென்றும் அதனையடுத்து இறைவன் அந்தப்பலியைத் தடுத்தாரென்றும் கூறப்படுகிறது.
நபி இப்றாஹிம் அவர்களின் அத்தகைய இறையச்சம் மற்றும் ஈகம் ஆகியவற்றை நினைவுகூர்ந்திடும் பண்பாட்டுப் பெருவிழாவின் மூலம் அவை தலைமுறை தலைமுறையாக இஸ்லாமியருக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.இது இஸ்லாமியருக்கு மட்டுமின்றி இறைநம்பிக்கையுள்ள யாவருக்குமான போதனையே ஆகும்.
இத்தகைய நன்னாளில் இஸ்லாமியப் பெருங்குடிமக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இசுலாமியர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு எதிராக இந்திய மண்ணில் திட்டமிட்டு விதைக்கப்படும் வெறுப்பு அரசியலை வீழ்த்திடவும்; சனநாயகம், சகோதரத்துவம் மற்றும் சமூகநல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்திடவும் உறுதியேற்போமென சனநாயக சக்திகள் யாவருக்கும் இந்நாளில் அறைகூவல் விடுக்கிறோம் என தெரிவித்துள்ளார்.