டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனத்தின் தமிழ் செங்கோல் நிறுவப்படவுள்ளது.
இந்த செங்கோலுக்கும் சோழர்களுக்கும் தொடர்பில்லை என்றாலும்,
இதன் வரலாறு மற்றொரு வகையில் தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கது.
1947 ஆகஸ்ட் 15 அன்று நாடு விடுதலை அடைந்தபோது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டை இந்தியத் தலைவர்களிடம் முறையாக ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதற்கு முன்னதாக அதற்கான எந்த மரபு முறைகள் பற்றியும் காங்கிரஸ் தலைவர்கள் அறிந்திருக்கவில்லை.ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல் என ஒருபுறம் இருப்பினும், நமது முறைப்படியான மங்கலத் தொடக்கம் எப்படி என்று வடநாட்டவர் முறையில் ஏதும் இல்லை.
காங்கிரசில் பிராமணிய ஆதிக்கம் அதிகம் என்று திராவிடர்கள் தொடர்ந்து கூறிவந்த நிலையில், அன்றிருந்த காங்கிரஸ் கட்சி பிராமணர்கள் கூட இதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்படவில்லை.சைவப்பெரும் தலைமையிடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனம் தான் அணுகப்பட்டது.
ஆதீனம் சார்பில் பொன்னால் ஒரு செங்கோல் செய்யப்பட்டு உச்சியில் நந்தியம்பெருமான் சிலை வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டது.சிறப்பு விமானத்தில் செங்கோலுடன் வலையபட்டியார் தவில், காரக்குறிச்சியார் நாகஸ்வரம். தமிழ் ஓதுவார் ஆகியோரும் டெல்லிக்குச் சென்றனர்.
திருஞானசம்பந்தரின் கோளறு பதிகம் ஓதுவாரால் பாடப்பெற்றது. கோளறு பதிகத்தின் இறுதி வரிகள் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்று முடியும்.ஒன்பது கோள்களைப் போற்றிப் பாடி சிவபெருமானை வணங்கிப் பாடும் சிறந்த பதிகங்கள் அவை.
தவில், நாகஸ்வர மங்கல இசை இசைக்க பிரிட்டிஷ் வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் செங்கோலை இந்தியப் பிரதமர் நேருவிடம் அளித்தார்.நாடு விடுதலையடைந்தது. தென்னாடுடைய சிவபெருமானை வணங்கி செங்கோல் பெறப்பட்டது.
இந்த செங்கோலைத்தான் நாடாளுமன்றப் புதிய கட்டடத்தில் வைக்கப் போகிறார்கள். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் செங்கோல் நிறுவப்படவுள்ளது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய அம்சம் என்பதில் சந்தேகமில்லை.