நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய உலக நாடுகள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் வேளையில், சந்திரயான் 3 உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயானின் உருவாக்கத்திற்கும், வெற்றிக்கும் காரணமாக இருந்த தமிழர்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்..
கடந்த 2009 ஆம் ஆண்டு, இந்திய விண்வெளிப் பயணத்தின் உச்சமாக கருதப்பட்ட சந்திரயான் 1 விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன் நிலவை ஒரு விண்கலத்தின் வாயிலாக ஆய்வு செய்யும் அறிவியல் திறனை இந்தியா பெற்றிருந்ததை உலகே உணரும் நாளாக அது அமைந்தது. அப்படிப்பட்ட சந்திராயன் விண்கலத்தை வடிவமைத்தவர் யார் தெரியுமா? பார்க்கலாம்..
சந்திரயான் 1 : மயில்சாமி அண்ணாதுரை
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்தியாவின் இந்த வெற்றிக்கும், பெருமைக்கும் காரணமாக இருந்தவர்களில் முக்கிய பங்கு வகித்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை. ‘நிலவு மனிதன்’ என்று அழைக்கப்பட்டவரும் ஆவார்.
மயில்சாமியின் திட்டத்தினால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-1 விண்கலம் தான் நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்து சாதனை படைத்தது. நம் இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்தது.
சந்திரயான் 2: வனிதா முத்தையா
2வது முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ மூலமாக சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி 95 சதவிகிதம் இலக்கை எட்டிய சந்திரயான் 2 கடைசி கட்டத்தில் நிலையில் தரையிறங்குவதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தோல்வியடைந்தது.
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் 2 திட்டத்தை தயாரிப்பதில் இரண்டு பெண்கள் தான் இருந்தனர். அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வனிதா முத்தையா.
இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநரான வனிதா முத்தையா கடந்த 2006 ஆம் ஆண்டு சிறந்த விஞ்ஞானி விருது பெற்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இவர் தரவுகளை கையாளுவதிலும் மேலும், சிக்கல்களை கண்டறிந்து சீரமைப்பதிலும் நிபுணத்துவம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் 3 : வீரமுத்துவேல்
வனிதா முத்தையா வேறு துறைக்கு மாற்றப்பட்ட பின்னர், கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-3ன் திட்ட இயக்குனராக தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார்.
அதையடுத்து கடந்த 4 வருடங்களாக வீரமுத்துவேல் தலைமையிலான குழு பல்வேறு வகையான ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகு சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தயாரித்தது. அதிலும், சந்திரயான் 2 திட்டத்தில் இருந்த கோளாறுகளை கண்டறிந்து சரி செய்து கச்சிதமாக சந்திரயான் 3 விண்கலம் தயார் செய்யப்பட்டது.
வீரமுத்துவேல் மெய்நிகர் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் குறித்தான ஆய்வில் ஆர்வம் கொண்டவர். இவரின் முழு ஈடுபாட்டில் தான் சந்திரயான் 3 தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 பல்வேறு கடினமான கட்டங்களை வெற்றிகரமாகக் கடந்து சென்று இன்று மாலை சரியாக 6.04 மணி அளவில் நிலவில் கால்பதிக்க தயாராக உள்ளது.
இப்படி இந்தியாவின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றியதில் தமிழர்களின் பங்கினை எண்ணி வியக்கத்தான் வேண்டும். சந்திரயான் 3-ன் வெற்றி இந்தியாவை மட்டும் அல்லாமல் அதற்கு காரணமாக இருந்த தமிழர்களையும் உலக அரங்கில் அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.