ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து கொடுத்த விவகாரத்தில் தெலங்கானா டிஜிபி அஞ்சனி குமாரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம் (Election Commission).
கடந்த 3ம் தேதி தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் நவம்பர் 30ம் தேதி பதிவான வாக்குகள், எண்ணப்பட்டன. அப்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடன் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையிலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது.
அதையடுத்து, ஏராளமான அரசு அதிகாரிகள் காங்கிரஸ் மாநில தலைவரான ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில், தெலங்கானா டிஜிபி அஞ்சனி குமாரும், ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதே தெலங்கானா டிஜிபி அஞ்சனி குமார், ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்ததன் மூலம், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவரை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்தது. இந்த நிலையில், தற்போது அந்த உத்தரவை தேர்தல் ஆணையம் (Election Commission) ரத்து செய்துள்ளது.
பொதுவாக ஒரு கட்சி வெற்றி பெற்று புதியதாக ஆட்சி அமைத்தால், அங்குள்ள தலைமை செயலாளர் தொடங்கி டிஜிபி வரையிலான முக்கிய அதிகாரிகள் அனைவரும் மாற்றப்படுவது வழக்கம். மேலும், தங்களுக்கு ஏற்றபடியான, தங்களது இசைவுகளை புரிந்துகொண்டு செயல்படும் நபர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும்.
அந்த வகையில் தற்போது தான் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து மாநில அரசு இயந்திரத்தின் பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு புதிய நபர்கள் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், டிஜிபி அஞ்சனி குமாரின் இடத்திற்கும் வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.