மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் கோரியுள்ளது மத்திய அரசு.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜிகா நிறுவனம் 1,977 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு மருத்துவமனை சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்ட நிலையில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக வேறு, எந்தவித கட்டுமான பணிகளும் அங்கு மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
இந்நிலையில், தற்போது ஜப்பானின் ஜிகா நிறுவனத்திடம் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதையடுத்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு மத்திய அரசு டெண்டர் கோரியது. தகுதி வாய்ந்த நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை டெண்டர் விண்ணப்பங்களை வழங்கலாம் எனவும் அறிவித்துள்ளது.
டெண்டர் விண்ணப்பங்களை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல் இயக்குனர் அலுவலகத்திலோ அல்லது இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் டெண்டர் விண்ணப்பங்கள் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பரிசீலிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்ட கட்டுமானப் பணிகளை 18 மாதங்களில் முடிக்கவும், தொடர்ந்து 33 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.