வெளுத்துவாங்கிய கனமழை.. தரங்கம்பாடியில் கடல் சீற்றம்.. – பீதியில் மக்கள்..!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதி கன மழை காரணமாக மூன்று தினங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று, நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அதி கனமழை காரணமாக கடந்த  3 நாட்களுக்கும் மேலாக தரங்கம்பாடி தாலுக்காவில் 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் 3500-க்கும் மேற்பட்ட  படகுகளை மீனவர்கள் கரையோரம் நிறுத்தியுள்ளனர்.

கனமழை காரணமாக தரங்கம்பாடி சுனாமி குடியிருப்பு பகுதியில் பாரதியார் விதி, ரவீந்தரநாத் தாகூர் விதி எம்ஜிஆர் வீதி  நேரு வீதி திருவள்ளுவர் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது.

முறையான வடிகால் இல்லாததால், குடியிருப்புக்களை மழை நீர் சூழ்ந்துள்ளது இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் குப்பைகளோடு தேங்கி நிற்பதால் சுகாதார  சீர்கேடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதே போன்று நேற்று மாலை பெய்த அதி கனமழையால் பொறையார் கடைவீதியில் மழை நீர் வடியாமல் குளம் போல் தேங்கியது. இதனால் வணிகர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். பல பகுதிகளில் மழை நீர் வடிய வழி இல்லாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Total
0
Shares
Related Posts