மகாராஷ்டிரா மாநிலத்தில் புது மாப்பிள்ளை முகூர்த்த நேரத்திற்கு வராமல்,குடித்து கும்மாளம் போட்டு மட்டையான நிலையில், மணமகள் வேறொருவரை கரம் பிடித்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வராமல் இருந்திருக்கலாம் அல்லது மறந்து போய் வரமுடியாமல் போய் இருக்கலாம். இங்கே என்னவென்றால் சரக்கு போதையில் மட்டையாகி மாப்பிள்ளை, கல்யாணத்திற்கே வராமல் போயிருக்கிறார். இதனால் கடுப்பான மணப்பெண்ணின் தந்தை தனது பெண்ணை உறவுக்காரர் ஒருவருக்கு அதே மேடையில் மணமுடித்து கொடுத்துள்ளார்.
கடந்த 22ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் திருமண ஏற்பாடுகள் ஜோராக நடந்துள்ளது. மாலை 4 மணிக்கு மண விழா நடக்கவிருந்ததால், உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் மணப்பெண்ணின் வீட்டில் பம்பரமாய் சுழன்று திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து, மணமகன் மற்றும் அவரது பெற்றோரை வரவேற்கும் நேரமும் வந்தது. மணப்பெண்ணின் குடும்பத்தினர் சகல ஏற்பாடுகளுடன் மணமகனை வரவேற்க வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர். ஆனால் மணமகனோ, அவரது குடும்பத்தினரோ வருவதற்கான எவ்வித அறிகுறிகளும் தெரியவில்லை.
இந்நிலையில் மாப்பிள்ளை தனக்கு திருமணமாகப் போகும் குஷியில் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு ஜாலியாக நடனமாடிக் கொண்டிருந்ததில், கல்யாணத்திற்கான முகூர்ந்த நேரம் கடந்தது கூட தெரியாமல் போயிருக்கிறது. 4 மணிக்கு மணமேடையில் இருக்க வேண்டிய மாப்பிள்ளை 8 மணிக்கு தனது நண்பர்கள் புடைசூழ மணப்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் அதற்கு முன்னதாகவே அந்த பெண்ணுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இதனால் கடுப்பான மாப்பிள்ளையும், அவரது நண்பர்களும் குடிபோதையில் பெண் வீட்டாருடன் சண்டையிட்டுள்ளனர்.
4 மணிக்கு நடக்கவிருந்த கல்யாணத்திற்கு 8 மணிக்கு வந்ததோடு, தகராறு செய்தால் எப்படி என போதையில் தள்ளாடிய மாப்பிள்ளை மற்றும் அவரது நண்பர்களை ஊர்மக்கள் கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் அரங்கேறி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், மிசீதரா என்ற சிரியா பாடலுக்கு நடனம் ஆடியதற்காகத்தான் மணமகள் மீது மணமகனும் அவரது குடும்பத்தினரும் கோபம் அடைந்துள்ளனர். அதில் நான் உன்னை கட்டுப்படுத்துவேன், நான் ஆதிக்கம் நிறைந்தவள் போன்ற வரிகள் இருந்ததால் கடுப்பான ஜோர்டானைச் சேர்ந்த மணமகன், அப்பெண்ணை அந்த கணமே விவகாரத்து செய்ய முடிவெடுத்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.