2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. திருக்குறள் உடன் அவையை சபாநாயகர் அப்பாவு தொடக்கி வைத்தார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைத்தது. தனது புதிய அரசின் இடைக்கால பட்ஜெட்டை ஆகஸ்டு 13-ந்தேதி தாக்கல் செய்தது.
இந்த நிலையில், 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆன இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டை போலவே இதுவும் காகிதமில்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது.
காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார். இந்த பட்ஜெட்டில், புதிய அறிவிப்புகள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு, இன்னும் நிறைவேற்றப்படாத திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற உள்ளது.
குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி இருப்பதுபோல, தனியாக மாதம் 2 முறை வெளியாகும் கல்வி பத்திரிகையும் தொடங்குவதற்கான அறிவிப்பு உள்ளிட்ட மேலும் பல அறிவிப்புக்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், சபாநாயகர் .அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.