உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேர் கட்டுமான பணிகள் (construction work) தொடங்கியது… தேர் கூண்டை கிரேன் மூலம் அகற்றும் பணி தீவிரம்..
பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் சர்வ தோஷ பரிகாரத் தலமாகவும் பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் பிறந்தால் முக்தி தரக்கூடிய தளமாகவும் விளங்குகிறது. திருவாரூர் தியாகராஜர் கோவிலின் உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் உலக புகழ் பெற்றது. இந்த ஆழித் தேரோட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில், இந்த வருடத்திற்கான ஆழித் தேரோட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வரும் மார்ச் 9 ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழாவிற்கான காண கொடியேற்ற நிகழ்வு தொடங்க உள்ளது. இந்த நிலையில் தேரடியில் உள்ள ஆழித்தேரின் கூண்டு பிரிக்கும் பணி என்பது தற்போது தொடங்கியுள்ளது.
திருவாரூர் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக விளங்குகிறது. இந்தத் தேரை பாதுகாக்கும் பொருட்டு இதற்கு ராட்சச கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.இதனை அகற்றும் பணிக்கான ஒப்பந்தமும் தேர் கட்டுமான பணிகளுக்கான (construction work) கோரப்பட்டு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேரின் கூண்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கிரேன் உதவியுடன் கண்ணாடி கூண்டிற்கான இரும்பு தூண்களை கிரேன் மூலம் கட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களில் தேர் மேல் கட்டுமான பணிகள் தொடங்க இருப்பதாகவும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர் கட்டுமான பணிகள் நடைபெறும் போது போக்குவரத்து மாற்றி அமைக்கப்படும் என்றும் திருவாரூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.