வருகிற 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை அதிகரித்து வரும் நிலையில் உருமாறிய ஒமிக்ரான் வைரசும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 8,981 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27லட்சத்து 76 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது.
சென்னையில் 200 வார்டுகளில் 1600 முகாம்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் கொரோனா பரவாமல் தடுப்பது மக்களின் கைகளில் தான் உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் இல்லை. என்று தெரிவித்த அவர், ஒவ்வொரு பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார் என்றும் 33 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டி இருந்தது என்றும் அதில் 21 லட்சம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் டோஸ் 92% செலுத்தப்பட்டுள்ளது என்றும் சென்னையில் மட்டும் 71சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த ம. சுப்பிரமனியன் வருகிற 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாகவும் தமிழ்நாட்டில் 35,46,000 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்கள்” என்றும் தெரிவித்தார்.