வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது .
வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் 5, 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது .
இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதனால் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை அசால்டாக கைப்பற்றியது.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. அதன்படி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள உலக புகழ் பெற்ற கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது .
ஆரம்பம் முதலே இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப்-3 வீரர்களான கைல் மேயர்ஸ் 2 ரன், பிரன்டன் கிங் 17 ரன், ஆலிக் அதானேஸ் 22 ரன்ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர் .

சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் தங்களது சுழலில் வெஸ்ட் இண்டீசை முழுமையாக மூழ்கடித்தனர். 23 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்னில் இந்திய அணியிடம் பணிந்தது .
இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது . அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் , இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர் .
பொறுப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில் 7 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார் . அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 19 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 5 ரன்னிலும், ஷர்துல் தாக்குர் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய இஷான் கிஷன் தனது 4-வது அரைசதத்தை பூர்த்தி செய்த கேட்ச் ஆனார். இதையடுத்து 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை சேர்த்த இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக பெற்ற 9-வது வெற்றி இதவாகும். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து இந்த இரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்ப்போம்.