திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் குட்டித் தவளை இறந்து மிதந்தால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே இருக்கும் சித்தரேவு கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடையில் நெல்லூரைச் சேர்ந்த பாண்டி என்பவர் ரூ.150 கொடுத்து குவார்ட்டர் மதுபாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார்.
அப்போது பாட்டிலுக்குள் ஏதோ ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உற்று கவனித்து பார்த்தபோது, கருப்பு நிறத்தில் குட்டித்தவளை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பாட்டிலின் மூடி உடைக்கப்படாத நிலையில், உள்ளே தவளைக் குட்டி கிடப்பது குறித்து டாஸ்மாக் ஊழியர்களிடம் பாண்டி கேட்டுள்ளார்.
அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த பாண்டி தனக்கு நியாயம் கிடைக்கும் வரை, அந்த பாட்டிலை உடைத்து குடிக்கப் போவதில்லை என கூறி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே மதுபாட்டிலுக்குள் குட்டி தவளை கிடந்த தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியது. இதனையடுத்து நெல்லூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஏராளமானோர் வந்து மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை பார்த்து சென்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
இந்த தகவலை அறிந்த அப்பகுதி மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.