காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் அக்கட்சியினர் குவிந்தனர். அப்போது அங்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல தியாகராஜன், பா.ஜ.க.வை வெளியேற்றி உத்தரவிட்டார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் ஆத்திரம், அடைந்த பாஜக தொண்டர்கள் மதுரை விமானநிலையத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல தியாகராஜன் வாகனம் மீது செருப்பு வீசினர்.இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்திற்காக பாஜக மதுரை மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் மன்னிப்பு கோரினார். பாஜகவிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது திமுக – பாஜகவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல தியாகராஜன் வாகனம் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இச்சம்பவம் தொடர்பாக 5க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆறின் ஆதரவாளர்கள் மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பாஜக மாவட்டுத்தலைவர் டாக்டர் சரவணன் மன்னிப்பு கோர வேண்டும் என மதுரை மாநகர மாநகரத்தந்தையின் கணவர் பொன் வசன் தரப்பினர் அவரது மாமனாருக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இதனையடுத்து யாரும் எதிர்பாராதவிதமாக மதுரை பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் நிதியமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து விமானநிலையத்தில் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரினார். பின்னர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில் “இராணுவ வீரரின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தச் சென்று இருந்தோம், என்ன தகுதி அடிப்படையில் அஞ்சலி செலுத்த வந்தீர்கள் என நிதியமைச்சர் கேட்டார்.இதனையடுத்து விமான நிலையத்தில் விரும்ப தகாத நிகழ்வுகள் நடந்துவிட்டது.
விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. அரசின் சார்பில் மரியாதை செலுத்தியபின்னர் மற்றவர்கள் விமானநிலையத்திற்கு வெளியே அல்லது ராணுவ வீரரின் வீட்டில் மரியாதை செலுத்தலாம் என அமைச்சர் பிடி ஆர் கூறினார்.
அதன்பின்னர் இராணுவ வீரரின் உடல் அரசு விதிமுறைகள் படி அஞ்சலி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அமைச்சரின் கருத்தை நான் தனி மனித தாக்குதலாக எடுத்துக் கொண்டேன்.
நான் பாரம்பரியமாகத் திராவிட குடும்பத்திலிருந்து வந்தவன். ஓராண்டு முன் பாஜகவில் சேர்ந்தேன், பாஜக சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்தனர், அதையும் பொறுத்தற்குக் கொண்டு நான் பாஜகவில் பயணித்தேன். இது ஒரு புறமிருக்க அமைச்சர் வாகனம் மீதான தாக்குதல் எனக்கு மன உளைச்சலை உண்டாக்கியது. எனக்குத் தூக்கம் வராத காரணத்தால் நள்ளிரவு நிதியமைச்சரைச் சந்தித்தேன். அவரிடம் மதுரை விமானநிலையத்தில் நடைபெற்ற விரும்ப தகாத காரணத்திற்காக மன்னிப்புகோரினேன்.
பாஜக தொண்டர்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது.
நிதியமைச்சர் இந்நிகழ்வைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது போன்ற துவேசமான அரசியலைச் செய்ய நான் ஒரு ஆளாக இருக்கக் கூடாது என நினைத்தேன். அமைச்சரைச் சந்தித்து மன்னிப்பு கேட்டதால் மனது இலகுவாக மாறி உள்ளது.
இதையடுத்து,இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பழனிவேல தியாகராஜன், இறந்த உடலை வைத்து அரசியல்வாதிகள் சாக்கடை அரசியல் செய்வதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. இது சரியான நேரம் அல்ல. இந்த அரசியல்வாதிகள் யார் என்பது மக்களுக்குத் தெரியும் என்றார்.