சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்கள் கிழிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் இரண்டு தரப்பிலும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு புதிய பொருளாளராக கே.பி. முனுசாமியை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வேண்டும் என தொண்டர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.
அதிமுக அலுவலகத்தில் கூடியுள்ள தொண்டர்கள் கோஷங்கள் எழுப்புவதுடன் எடப்பாடி மற்றும் சிவி சண்முகம் ஆதரவாளர்கள் அங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்களில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்களை கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், தேனியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் சென்னைக்கு புறப்பட்டு உள்ளார்.