நீலகிரி மாவட்டத்தில் தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ராயல் என்ஃபீல்டு புல்லட் வாகனங்களை வழங்கி அதன் உரிமையாளர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்
எந்த ஒரு நிறுவனத்திலும் பணியாற்றும் பணியாளர்கள் தீபாவளியை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருப்பார்கள். காரணம் தீபாவளிக்கு வழங்கப்படும் போனஸ் தொகை தான். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருகின்றன.
அதில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதுடன் இனிப்பு , பட்டாசு, உள்ளிட்ட பொருட்களையும் வழங்குவது வழக்கம். அதிலும் சில நிறுவனங்கள் ஊழியர்கள் எதிர்பார்க்காத வகையில் பரிசுகளை வழங்கு ஊழியர்களை திக்குமுக்காட வைத்து விடுகிறனர்.
அந்த வகையில் நீலகிரியில் தனது ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்கியதோடு, மிகப்பெரிய பரிசைக் கொடுத்து ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் அதன் உரிமையாளர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், சிவக்குமார் பொன்னுசாமி என்ற தொழிலதிபருக்கு சொந்தமான சிவகாமி எஸ்டேட் என்ற தேயிலை தோட்டம் உள்ளது. இவர் கடந்த 20 ஆண்டுகளாக கீழ் கோத்தகிரி பகுதியில் தேயிலை சாகுபடி, காளான் தயாரிப்பு, உள்ளிட்ட மலைக் காய்கறிகள் உற்பத்தி உள்ளிட்ட விவசாயம் செய்து வருகிறார்.
ஆண்டுதோறும் ஊழியர்களுக்கு போனஸ் தொகையுடன் ஸ்மார்ட் டிவி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தீபாவளி போனஸாக வழங்கி வந்த சிவக்குமார் வரும் தீபாவளியை முன்னிட்டு ராயல் என்ஃபீல்டு புல்லட்டை பரிசாக வழங்கியிருக்கிறார்.
அதாவது தனது நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரியும் 15 ஊழியர்களை தேர்ந்தெடுத்து, அந்த ஊழியர்களை வரவழைத்து ஒவ்வொருவரின் கையிலும் ராயல் என்ஃபீல்டு புல்லட்டின் சாவியை கொடுத்து அவர்களை சந்தோசத்தில் திக்கு முக்காட செய்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் அந்த 15 பேருடன் தானும் ஒரு புல்லட்டில் ஊர்வலமாக சென்று இந்த மகிழ்ச்சியை கொண்டாடியிருக்கிறார். இந்த இன்ப அதிர்ச்சியால் நெகிழ்ந்து போன தொழிலாளர்கள், தங்கள் உரிமையாளர் சிவகுமாருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.