யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் , அண்ணா , கலைஞர்,முதலமைச்சர் போன்ற கழகத் தலைவர் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள் என்று நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு:
தமிழகத்தில் மழை வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கான மீட்பு பணிக்காக, மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கோரியிருந்தது.அதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேசினார். பின்னர் உதயநிதியின் கருத்துக்கு பதில் அளித்த அவர், “அப்பன் வீட்டு சொத்தா என கேள்வி கேட்பவரை, அப்பன் வீட்டு சொத்தை வைத்துக்கொண்டு பதவியை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாரா என கேட்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர்,“அவர்கள் பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையை கொடுக்கத்தானே செய்கிறோம். அப்பன் வீடு… ஆத்தா வா.. போன்ற பேச்சுகள், அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல. அவரின் தாத்தா எப்பேர்ப்பட்ட தமிழறிஞர்” எனவும் கூறினார்.
மேலும், “ வகிக்கும் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதை பொதுவாகவே சொல்கிறேன்; அவர்மீது எந்த காழ்ப்புணர்வுடனும் இதை கூறவில்லை” என்றார்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.
சிலரிடம் அண்ணாவைப் போல – சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.
வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், “நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ” என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்” என்று கூறினேன்.
என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.
மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.
வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம்.
நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே! என்று குறிப்பிட்டுள்ளார்.