சுமார் 45 வருடங்களுக்கு முன்பு இராமச்சந்திரன் என்ற இளைஞர் கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள சிவன் கோவிலின் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு ஒரு இடத்தில் கால் வைத்த போது ஏதோ தட்டுப்படுவதுபோல உணர்ந்த அவர் உடனடியாக ஒரு கடப்பாரையை எடுத்து வந்து அந்த இடத்தை தோண்டியுள்ளார்.
அப்போது, மண்ணுக்கு அடியில் பஞ்சலோகத்தால் ஆன சொம்பு ஒன்று இருந்ததைக் கண்டு வியந்த அவர், அதனை மண்ணுக்குள் இருந்து வெளியில் எடுத்துள்ளார். பின்னர், அதனை திறந்து பார்த்த போது அந்த சொம்பு நிறைய தங்க நாணயங்கள் இருந்துள்ளன.
அதனைப் பார்த்து புதையல் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு ஒரு பேரதிர்ச்சியும் காத்திருந்தது. இராமச்சந்திரனிடம் புதையல் இருப்பது ஊர் மக்களுக்கு தெரிந்துவிட்டது. மேலும், அந்த தகவல் காவல் துறை வரை சென்ற நிலையில் காவல் துறையினரும், வருவாய் துறையினரும் அங்கு வந்து இராமச்சந்திரனிடம் இருந்த புதையலை பறிமுதல் செய்தனர்.
தனக்கு கிடைத்த புதையலை வருவாய் துறையினர் பறிமுதல் செய்ததால் இராமச்சந்திரன் கதறி அழுதுள்ளார். அதையடுத்து, உங்களுக்கான பங்கு சட்டப்படி உங்களுக்கு வந்து சேரும் என வருவாய்த்துறையினர் அவரிடம் கூறிச் சென்றனர்.
ஆனால், புதையல் கண்டெடுக்கப்பட்ட கோவில் கவலப்பாறை அரண்மனைக்கு உட்பட்டது என்பதனால் அவர்களும், புதையலில் பங்கு கேட்டனர். அதனையடுத்து 1336 தங்க நாணயங்கள் இருந்த அந்த சொம்பு திருச்சூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வருடங்கள் பல கடந்தும் புதையலில் தன் மகன் இராமச்சந்திரனுக்கு பங்கு கிடைக்காததால் மனமுடைந்த அவரது தாய் மனநலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், இராமச்சந்திரன் தாயின் மறைவிற்குப் பின் திருமணம் செய்து மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில், புதையல் முழுக்க முழுக்க அரண்மைக்கே சொந்தம் என்று அறிவிக்கப்பட்டதால் அவரது மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டு பிரிந்து சென்றனர்.
மேலும், புதையல் தொடர்பாக நடந்த இந்த வழக்கில், புதையலுக்கு சொந்தம் கொண்டாட எந்த ஆதாரமும் இராமச்சந்திரன் தரப்பில் தர முடியாத நிலையில், கடைசியில் நோய்வாய்ப்பட்டு நேற்று முன் தினம் உயிரிழந்தார். ஆனாலும், இவருக்கு புதையல் கிடைத்தது உண்மை என்பதால் சாகும் வரை “புதையல் கிடச்ச இராமச்சந்திரன்” என்றே அழைக்கப்பட்டார்.