திருப்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றிக்கொண்டிருந்த இளைஞரிடம் லிப்ட் (lift) கேட்ட ஒரு நபர், அவரை அழைத்துச் சென்று, அவருடைய வாகனம், செல்போன், பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்த நிலையில், அந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையத்தில் தங்கியிருக்கும் பெர்னான்டஸ் என்ற நபர், கடந்த வியாழக்கிழமை அன்று இரவு, பல்லடத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, பெர்னான்டஸிடம் அருள்புரம் அருகே லிப்ட் கேட்ட ஒரு மர்ம நபர், தனது இருசக்கர வாகனம் பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் நின்று விட்டதாகவும், தன்னை சற்று தூரத்தில் இருக்கும் அந்த இடத்தில் இறக்கிவிடுமாறு கேட்டுள்ளார்.
இந்நிலையில், அவரைப் பார்த்து பரிதாபம் அடைந்த பெர்னான்டஸ், அந்த நபரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு (lift) அவர் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, பாச்சாங்காட்டுபாளையம் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வழியாக சென்றபோது, அங்கு மறைந்திருந்த 3 மர்ம நபர்கள் பெர்னான்டஸை தடுத்து நிறுத்தி அவரைத் தாக்கி, அவருடைய இருசக்கர வாகனம், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன், ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை விரட்டியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பி வந்த பெர்னாண்டஸ் இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில், பல்லடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியத்தில், சிவக்குமார், சந்தோஷ் குமார் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், வழிப்பறியில் தொடர்புடைய மேலும் இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.