கோகுல்ராஜ் (Gokulraj)ஆணவ கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கப்பட உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ்(Gokulraj) என்பவர் ஆணவ கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு, மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.’
ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். முன்னதாக இந்த வழக்கில் இருந்து 5பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாய் மேல்முறையீடு செய்திருந்தார்.
மேலும் இந்த மனுக்களை பெற்று விசாரித்த நீதிபதிகள், வழக்கின் முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது விசாரணையின்போது சாட்சி சொன்னவர், பிறகு தான் சொன்னதற்கு நேர்மாறாக நீதிமன்றத்தில் சாட்சி அளித்ததாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை சுட்டிக்காட்டி, தங்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டார்.
இதனையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகவும் திட்டமிட்டு கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாக தனது வாதத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில் கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் இருந்த திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் பகுதி மற்றும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில் பாதை ஆகிய இடங்களை நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி மாதம் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது