மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழக முதல்வர் தனி பிரிவு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் என பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த கதிரவன் என்ற இளைஞர் செல்போன் டவர் மீது ஏறி கோரிக்கை மனுவின் மீது மாலை அணிவித்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பொறையார் போலீசார் இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து இளைஞருக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தரங்கம்பாடி தாசில்தார் புனிதா மற்றும்
சீர்காழி டிஎஸ்பி லாமேக் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் மற்றும் துறை அதிகாரிகள் கைப்பட எழுதி கொடுத்ததன் பேரில் போராட்டத்தை இளைஞர் கதிரவன் மற்றும் பொதுமக்கள் கைவிட்டனர்.
தொடர்ந்து இளைஞர் கதிரவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இதே இளைஞர் கடந்த மே மாத இறுதியில் காவிரி ஆற்றில் கழிவுநீர் கழிப்பதாக கூறி ஆற்றில் இறங்கி தலைகீழாக நின்றபடி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.