VCK’s Pot Symbol-தொடர் போராட்டத்துக்குப் பின்னர் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் களம் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தனித் தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிதம்பரத்தில் கட்சியின் நிறுவனரும் தலைவருமான திருமாவளவனும், விழுப்புரத்தில் முனைவர் ரவிக்குமாரும் மீண்டும் போட்டி போடுகின்றனர்.
கடந்த தேர்தலில் திருமாவளவன் பானை சின்னத்திலும், ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் களம் கண்டனர். இந்த தேர்தலில் தங்கள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று விசிக தரப்பு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தது. மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையத்திடம் பானை சின்னம் ஒதுக்கக்கோரி வழக்கும் தொடுத்திருந்தது.
இதையும் படிங்க: 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் – VCK press meet
இந்த நிலையில், திருமாவளவனுக்கு பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது.
ஆனாலும் தங்களுக்கு பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று திருமாவளவன் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். பா.ஜக கூட்டணியில் உள்ள த.மா.கா, பா.ம.க, அ.ம.மு.க. கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னம் கொடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் பா.ஜ.கவின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். தனது தேர்தல் பிரசாரத்திலும் பானை சின்னத்தை சொல்லியே வாக்கும் சேகரித்து வந்தார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கி அறிவித்துள்ளது. இதன்படி சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை ஒதுக்கி உள்ளது.