திருப்பதி ஏழுமலையான் கோவிலை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன்கள் நாளை முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சீனிவாசம் வளாகத்திலுள்ள இலவச தரிசன டோக்கன் பெற குவிந்தனர்.
இந்த நிலையில் நாளை வரை திருப்பதியில் உள்ள சீனிவாசம் கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டரில் நேற்றைய தினமே டோக்கன்கள் வழங்கப்பட்டு முடிந்ததை அடுத்து அந்த தேவஸ்தான கவுண்டர் மூடப்பட்டுள்ளது.
இதையடுத்து இனிமேல் இங்கு இலவச தரிசனம் வழங்கப்படாது என்று அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் கூறியதால் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டும் எனக்கூறி பக்தர்கள் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்தது சீனிவாசம் கட்டடம் எதிரில் இருக்கும் சாலையில் அமர்ந்து போக்குவரத்தை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த திருப்பதி காவல் துறையினர் பக்தர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தினர்.