மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வார்டு கவுன்சிலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊதா நிற சட்டை அணிந்து வந்த ஒரு நபர் வார்டு கவுன்சிலரை அருகில் சென்று சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பனிஹாத்தி நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு உறுப்பினராக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர் அனுபமா தத்தா. இவர், நேற்று இரவு 7.30 மணியளவில்,மருந்துகள் வாங்குவதற்காக அகர்பாரா தெண்டல்தலா என்ற பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது மருந்து வாங்கிவிட்டு தனது நண்பருடன் வீடு திரும்பவதற்காக இருசக்கர வாகனத்தில் பின்னால் ஏறி அமர்ந்தபடி, மருந்தக ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒன்றும் தெரியாததுபோல் சாதாரணமாக நடந்து வந்த மர்ம நபர், தத்தா அருகில் வந்து மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை பின் பக்க தலையில் வைத்து சுட்டார். இதனால் சரிந்து விழுந்த தத்தாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு மீட்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
https://twitter.com/Tamal0401/status/1503192114305257478?s=20&t=1eGFzJ9wkMj3oi0f7Oatug
அனுபமா தத்தா கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கௌஷிக் சட்டார்ஜியை தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் 3207 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக சார்பில் போட்டியிட்ட கௌஷிக் சட்டர்ஜி 1117 வாக்குகள் பெற்றிருந்தார்.
இந்த நிலையில்அதே நாளில், தபான் கந்து என்ற காங்கிரஸ் வார்டு கவுன்சிலரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜல்தா நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு கவுன்சிலர் தபான் கந்து ஜல்தா நேற்று மதியம் பாகமுந்தி சாலையில் நடந்துகொண்டிருந்தபோது 3 மர்ம நபர்கள் சுற்றி வளைத்து துப்பாக்கியால் தலை மற்றும் உடலில் சுட்டனர்.அவரை மீட்டு ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தில் ஒரே நாளில், நடைபெற்ற இரண்டு கொடூர கொலை சம்பவத்தால் அம்மாநிலம் பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.
இதனிடையே திரிணாமூல் காங்கிரஸ் வார்டு கவுன்சிலர் கொலை அரசியல் காரணங்களுக்காக செய்திருக்கலாம் எனவும், இது ஒரு திட்டமிட்ட படுகொலை எனவும், கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்களை தண்டிக்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ பார்த்தா பௌமிக் போலிசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இருவேறு இடங்களில் நடைபெற்ற கொலைகள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.