2024 -25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் (TN Budget) பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார்.
நடப்பாண்டுக்கான சட்ட பேரவை கூட்டத்தொடர் கடந்த 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வழக்கம் போல் இந்த முறையும் ஆளுநர் அவர் பங்கிற்கு செய்யவேண்டியதை செய்துவிட்டு சென்றார் .
இதையடுத்து ஆளுநரின் செய்கைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 15-ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் பதிலுரையும் அளித்தார்.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்காக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
மத்திய அரசால் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தான் தாக்கல் செய்யப்படும்.
மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் , வரும் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் இம்முறை பிப்ரவரி மாதமே தாக்கல் செய்யப்படுகிறது.
நிதியமைச்சர் பொறுப்பை ஏற்று இருக்கும் , அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் முதல்முறையாக தனது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் .
Also Read : https://itamiltv.com/fishermen-in-jail-tncm-request/
நிதி அமைச்சரை தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நாளை (பிப்.20) தாக்கல் செய்கிறார்.
இவை இரண்டும் நடந்த பின் பட்ஜெட்கள் மீதான விவாதம் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும். விவாதத்துக்கு 2 அமைச்சர்களும் 22-ம் தேதி பதில் அளிக்கின்றனர்.
பட்ஜெட் தாக்கலில் இடம் பெரும் 7 சிறப்பு அம்சங்கள்:
‘மாபெரும் 7 தமிழ்கனவு’ என்ற தலைப்பில் சமூக நீதி
கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு
உலகை வெல்லும் இளைய தமிழகம்
அறிவுசார் பொருளாதாரம்
சமத்துவ நோக்கில் மகளிர் நலம்
பசுமைவழிபயணம்
தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் (TN Budget) ஆகிய 7 சிறப்பு அம்சங்கள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.