முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவின் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வேலூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் , முடிவுற்ற பணிகளை திறப்பு , பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்வதாக இருந்தது.
இந்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதால் அந்நிகழ்ச்சியில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” நாளை நடக்கவிருக்கும் ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் நாளை மறுநாள் திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் முதலமைச்சருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் கலந்துக்கொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இவற்றிக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.