முன்னாள் ஆந்திர மாநில முதல்வரும், முன்னாள் தமிழக ஆளுநருமான ரோசய்யா வயது முதிர்வு காரணமாக உடல் நல குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் இன்று காலமானார்.
குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெமுரு கிராமத்தில் 1933 ஆம் ஆண்டு பிறந்தார் கொனிஜெட்டி ரோசய்யா. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் 1968, 1974 மற்றும் 1980 -ஆம் ஆண்டுகளில் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதன்முறையாக மரி சென்னாரெட்டி அரசில், சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றிய இவர் பின்னர் பல முதலமைச்சர்களின் அமைச்சகங்களில் பல முக்கிய இலாகாக்களை வகித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சரவையில் நீண்ட அனுபவம் கொண்ட ரோசய்யா, 2009 முதல் 2010 வரை ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
2011 முதல் 2016 வரை தமிழக ஆளுநராகப் பணியாற்றிய அவர், பின்னர் ஐதராபாத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். அவர் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.