சாலைகளில் மோட்டார் வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்டு உயிரைக் காப்பாற்றுவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, இவ்வகை உதவிக்கு மத்திய அரசு 5000 ரூபாய் வழங்கி வரும் நிலையில், ஐந்தாயிரம் ரூபாயுடன் மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ஐந்தாயிரம் ரூபாய் சேர்த்து வழங்கப்படவுள்ளது.
இந்த தொகையை பெறுவதற்கு, சாலை விபத்தில் சிக்கியவர்களை “கோல்டன் ஹவர்” எனப்படும் கால அளவில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உயிரை காப்பாற்றியிருக்க வேண்டும்.
அப்படி வெகுமதி பெற தகுதியானவர்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வார்கள். இந்த வெகுமதியைப் பெற சில வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரே விபத்தில் பல உயிர்களை ஒருவர் காப்பாற்றியிருந்தால் அவருக்கு 5000 ரூபாய் வழங்கப்படும் எனவும், ஒருவரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் ஐந்தாயிரம் ரூபாய் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், ஒரே விபத்தில் பலரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் அவர்கள் அனைவருக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்றும்
அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டம் வரும் 2026 மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது