நேரடி அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான கொரோனா சிகிச்சை செலவு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்துக்கு மேல் சிகிச்சைக்கான செலவு உயர்ந்தால், அதை அரசே வழங்கும் என அறிவிக்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொற்று பாதிப்பினை உலகளாவிய பொது சுகாதார பேரிடராக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், பொது சுகாதார திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றை பட்டியலிடப்பட்ட நோயாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் தன்மையின் நிலையைக் கருத்தில் கொண்டு தொற்று நோய்க்கான சிகிச்சைக்கு தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகரிக்கப்பட்டுள்ள பட்டியலினையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எளிதில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் திருத்தப்பட்ட வழிமுறைகள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரையும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பொது மக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், நேரடி அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான கொரோனா சிகிச்சை செலவு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்துக்கு மேல் சிகிச்சைக்கான செலவு உயர்ந்தால், அதை அரசே வழங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கூடுதல் சிகிச்சை செலவினத்திற்காக ரூ.1 கோடியை சுழல் நிதியாக தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது.