காந்தியடிகளை சிறுமைப்படுத்தும் பிரதமர் மோடியை இந்திய நாட்டு மக்கள் என்றைக்குமே மன்னிக்க மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள செல்வப்பெருந்தகை, உலக நாடுகளில் இந்தியா என்று சொன்னாலே மகாத்மா காந்தியின் நினைவு தான் அனைவருக்கும் வரும் எனவும், மகாத்மா கொலை செய்யப்பட்டதற்கு பின்னால், ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை சித்தாந்தம் அடங்கியிருப்பதை எவரும் மறுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
2008- ஆம் ஆண்டு மலேகான் குண்டு வெடிப்பில் 12 பேர் படுகொலைக்கு காரணமானவர் பிரக்யாசிங் தாகூரை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியவர் மோடி என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க : பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் : விதிமீறலா? – ஆர்.எஸ்.பாரதி!
மகாத்மா காந்தியின் புகழ் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., வகுப்புவாத சக்திகளின் வரம்பு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது எனவும் தேச தந்தை என்று இந்திய மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்களாலும் போற்றி பாராட்டப்பட்டவர் எனவும் செல்வபெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய புகழுக்கு உரியவரான காந்தியடிகளைத் தான் அட்டன்பரோ சினிமாவாக எடுக்க வேண்டும் என்று நினைத்தாரேயொழிய, அவர் சினிமாவாக எடுத்ததால் தான் காந்தியடிகள் அறியப்பட்டார் என்பது நரேந்திர மோடியின் நீண்டகால அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும் என விமர்சித்துள்ளார்.
காந்தியடிகளை சிறுமைப்படுத்துகிற பிரதமர் மோடிக்கு அதற்கான தண்டனையை வருகிற நாடாளுமன்றத் தேர்தல் முடிவின் மூலம் மக்கள் வழங்கப் போவது உறுதி எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.