விழுப்புரம் அருகே பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு எழுந்த மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டு மேல்பாதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பணியில் 2000 போலீஸ் ஈடுபட்டுள்ளனர்.
சாதி , மதம் என்ற பிரிவினைவாத குற்ற சம்பவங்கள் மன்னர்காலத்தில் தொடர்ந்து மக்களாட்சி நடக்கும் 2023 ஆம் ஆண்டிலும் நடைபெற்று வருகிறது . அந்தவகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது .

வெகுவிமர்சியாக நடைபெற்ற திருவிழாவில் அதே ஊரை சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் சிலர் அம்மனை வழிபட கோயிலுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் கோயிலுக்குள் செல்வதை கண்டு ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் பட்டியலின இளைஞர்கள், பெண்களை ஒருமையில் பேசி கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சண்டை பூகம்பமாய் வெடிக்க இச்சம்பவம் குறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள வளவனூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரு தரப்பினரிடனும் மாவட்ட நிர்வாகத்தினர் 7 முறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பட்டியலின மக்களை கோயிலுக்கு அனுமதிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் இன்று காலை கோயிலுக்கு சீல் வைத்தார் . பிரச்சனை செய்ததாக கூறப்படும் இரு சமூக மக்களுக்கும், வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் சம்மன் அனுப்பியுள்ளார்.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் மேல்பாதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்