நடப்பாண்டுக்கான தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழ்நாடு அணி வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்தரில் நடப்பாண்டுக்கான தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 12ஆம் தேதி முதல் முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (26.06.2023) நடைபெற்ற தமிழ்நாடு அணி மற்றும் இரயில்வே அணிக்கு எதிரான அரையிறுதியில் தமிழ்நாடு அணியானது 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழ்நாடு அணிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் .
இந்த அணியில் உள்ள 12 வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு சீனியர் பெண்கள் கால்பந்து அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டி நாளை 28.06.2023 அன்று நடைபெறவுள்ளது.இந்த போட்டியில் வென்று தமிழக அணி சாதனை படைக்குமா என்பதை நாம் காத்திருந்து பார்ப்போம்.