2024 ஆம் ஆண்டு புத்தாண்டில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நமது லட்சியம் நிறைவேறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2023 ஆண்டை நாம் இன்றுடன் வழியனுப்ப இருக்கும் வேளையில் இந்த ஆண்டு முழுவதும் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை நம்மால் நினைத்து பார்க்காமல் இருக்க முடியாது . அதிலும் குறிப்பாக அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு என பலவற்றிலும் நமக்கு பிடித்ததும் நடந்திருக்கிறது சில கசப்பான விஷயங்களும் நடந்திருக்கிறது .
இந்நிலையில் நாளை பிறக்க இருக்கும் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது :
“புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஒளிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நமது லட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும். அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.