பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் டிடிஎஃப் வாசன் அத்துமீறி நடந்து கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரின் ஓட்டுநர் உரிமத்தை தமிழ்நாடு காவல்துறை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனது விலையுயர்ந்த பைக்கில் அதிவேகமாக சென்று வீலிங் சாகசம் செய்யமுற்பட்டபோது பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார் .
இந்த கோர விபத்தில் வாசனுக்கு சிறு சிராய்ப்புகள் மற்றும் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . இதுமட்டுமல்லாமல் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி பறக்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது .
இந்நிலையில் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்துக்குள்ளான டிடிஎஃப் வாசனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி அவரது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாராயணன் திருப்பதி கூறியதாவது :
வாசன் என்ற ஒரு நபர் நேற்று மாலை தேசிய நெடுஞ்சாலையில் மிக விரைவாக தன் இரு சக்கர வாகனத்தை செலுத்தியதோடு பல்வேறு சாகசங்களை செய்வதாக எண்ணிக்கொண்டு பல்வேறு வாகனங்களுக்கு இடையூறு செய்ததோடு, பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அத்துமீறி நடந்து கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவர் காயமடைந்துள்ளார் என்று ‘ஐயோ பாவம்’ என்று நின்று விடாமல், பொது மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் வகையில் வாகனத்தை செலுத்தியதற்காக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு காவல் துறை அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.