இன்று புதுக்கோட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் ஸ்ரீமுத்து மாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா இன்று 7ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 26 அம தேதி சனிக்கிழமை அன்று பணி நாள் எனவும், வழக்கமாக சனிக் கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பொதுத் தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதே போல், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு இன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக்கு பதிலாக 19ஆம் தேதி பணி நாளாக எடுத்துக் கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவ-மாணவிகளுக்கு ஏழாம் தேதி நடைபெறவுள்ள தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.