தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு மொத்தம் 5831 காலி பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு, 5255 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21ம் தேதி நடத்தப்படும் என்றும் இதன் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களுக்கும் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.
அதே சமயம், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு முன்பு ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது.
மே 21ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் மொழிப்பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்