திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாகர்கோயில், மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெற உள்ள மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜூலை 6 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது என்றும் இந்த விடுமுறைக்கு ஜூலை மாதம் 4 ஆவது சனிக்கிழமை குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில், தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களை கொண்டு இயங்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.