திருவானைக்காவல் கோவில் யானை அகிலா தனது 21ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவதும், கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்டதுமான திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது.
இவ்வாலயத்தில் சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின்மேல் விழாமல் பாதுகாத்தது என்றும் யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது என்பது வரலாறு, அதனாலேயே திருஆனைக்கா என இத்தலம் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் யானை முக்கிய பங்காற்றுகிறது, ஒவ்வொரு கால பூஜையிலும் கோவில் யானை அகிலா மூலம் புனிதநீர் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுவது மற்றும் யானை அகிலாவும் முக்கிய பங்காற்றுகிறது.
அந்த வகையில் கடந்த 2002ல் பிறந்த அகிலா யானையானது கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின்போது திருக்கோவில் பூஜைகள் மற்றும் திருப்பணிக்காக திருவாணைக்காவல் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அகிலாவிற்கு இன்று 21-வது வயதை எட்டும் நிலையில் திருக்கோவில் சார்பில் யானைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கோவில் யானை அகிலா அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு பின்னர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் யானைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு யானை பாகன்கள், அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் பங்கேற்ற யானை அகிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடினர் .
பின்னர் பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய், கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி யானையை மகிழ்வித்தனர். பக்தர்கள் ஒருசேர பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர் அதனை ஏற்றுக் கொண்டு தும்பிக்கையை ஆட்டி தனது நன்றியைத் தெரிவித்தது அதனைப் பார்க்க வந்த அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.