சேனல் நிறுவனங்கள் பிரதான சேனல்களை, தொகுப்பிலிருந்து வெளியேற்றுவதால், டிச., 1 முதல் கேபிள், ‘டிவி’ கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக, கேபிள் ஆப்ரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேனல்களுக்கு மாறும் முறை, 2019 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைப்படி வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை, தேர்வு செய்து கொள்ளலாம்.
ஒரு சேனலின் அதிகபட்ச கட்டணம், 19 ரூபாயிலிருந்து, 12 ஆக குறைக்கப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் மேலும் அதிகமான மற்றும் விரும்பிய சேனல்களை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த திருத்தப்பட்ட கட்டணத்திற்கு, சேனல் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தற்போது ஒவ்வொரு நிறுவனங்களும் தொகுப்பு சேனல்களின் கட்டணத்தை உயர்த்த உள்ளன. இல்லையெனில், பிரதான சேனல்களை தொகுப்பில் இருந்து மாற்ற உள்ளனர். அவ்வாறு மாற்றும்போது, அதற்கான கட்டணம் மாறும். இதனால், மாதக் கேபிள் கட்டணம், 30 முதல் 40 சதவீதம் வரை உயரும் என கேபிள் ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, அரசு கேபிள் மாதக் கட்டணமாக, 130 ரூபாய் உடன் ஜி.எஸ்.டி., என, 154 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது நிலையில் மேலும் கேபிள் கட்டணம் அதிகரிக்கும் என்ற தகவலால் நடுத்தரவர்க்கத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.