உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கில் முதல் குற்றவாளி சின்னசாமியை விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என சங்கரின் மனைவி கவுசல்யா பேட்டி..
மதுரையில் எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் மற்றும் உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கவுசல்யா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்,
எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் கூறுகையில் “2016 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். 2017 ஆம் ஆண்டு சங்கர் படுகொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் சங்கர் படுகொலை வழக்கில் முதல் குற்றவாளியான சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு சின்னசாமி விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, சங்கரின் மனைவி கவுசல்யா, சங்கரின் தம்பி விக்னேஷ்வரன் சார்பில் வழக்கு தொடுத்தனர். ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும் வழக்கு விசாரணைக்கு எடுக்கவில்லை.
தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகள் எடுத்து வழக்கை விசாரணைக்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் 20 ஆண்டுகளில் 6 ஆணவக் கொலை வழக்குகளில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது” என கூறினார்.
பின்னர், சங்கரின் மனைவி கவுசல்யா கூறுகையில் “உச்சநீதிமன்றத்தில் 3 ஆண்டுகளாக வழக்கு கிடப்பில் உள்ளது, வழக்கு கிடப்பில் போடப்பட்டது பாதிக்கப்பட்டவர் என்கிற தரப்பில் மனதுக்கு வேதனையாக உள்ளது, சங்கர் படுகொலை வழக்கில் உறுதுணையாக இருப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார், ஆனால், இதுவரை வழக்கு விசாரணைக்கு வர எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, உச்ச நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்” என கூறினார்.