உடுமலை அருகே தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் வேதனை அடைந்த பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே இயங்கி வரும் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 1 படித்துவரும் கலைச்செல்வன் (16) என்ற மாணவன் பள்ளியின் முதல் தளத்திற்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவரை சக மாணவர்களும், ஆசிரியர்களும் உடனடியாக மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் விரைந்து வந்த கணியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் நேற்று வகுப்பு திருப்புதல் தேர்வின் போது காப்பி அடித்ததாகவும் இதனை ஆசிரியர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தெரிவித்த மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி ‘‘மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் ஆசிரியர்களிடமும், கண்காணிப்பாளரிடமும் தனித்தனியே விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்களிடமும் விசாரிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.
பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எந்த பிரச்சனைக்கும் தற்கொலை ஒன்றே தீர்வு இல்லை. எதையும் எதிர்கொள்ளும் மன தைரியத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.