வேலை கிடைக்காத விரக்தியில் வேலையில் இருக்கும் ஒருவனை பார்த்து திருமணம் செய்துகொள்! என மனைவிக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பிவிட்டு கணவன் செய்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவைச் சேர்ந்தவர் சதீஷ் பிஜாடே. அவருக்கு தற்போது 35 வயது ஆகிறது. 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சமோட்டா தில்வாரியை மணந்தார் சதீஷ். மனைவியுடன் ஹர்தா பகுதியில் வசித்து வந்தார். பிடெக் பட்டதாரியான சதீஷ், கடந்த சில நாட்களாக வேலையில்லாமல் இருந்தார். இவரது மனைவி வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். திருமணத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் சமோட்டா வேலைக்கு சென்றிருந்த போது வேலை கிடைக்காமல், விவாகரத்தை எதிர்நோக்கிய நிலையில் விரக்தியின் உச்சத்தில் இருந்த சதீஷ் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதற்கு முன் தன் மனைவிக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த செய்தியில், “நான் போகிறேன். நீ நல்லா இரு! வேலை இருக்கிற வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கோ” என்று குறிப்பிட்டுள்ளார் சதீஷ்.
இதைப் படித்துவிட்டு கணவனை அழைக்க முயன்றாள் மனைவி. போனை யாரும் எடுக்காததால் காவல்துறைக்கு தகவல் கொடுத்தாள். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சதீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இரண்டு பக்க உருக்கமான தற்கொலைக் குறிப்பையும் அவர் விட்டுச் சென்றுள்ளார். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை எவருக்கும் கிடையாது. தற்கொலை எண்ணம் தோன்றும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை செய்து வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)