உத்தரப் பிரதேசத்தில், 42 ஆண்டுககளுக்கு முன் கொலை செய்த வழக்கில் (murder case) 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில், ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றம் 42 ஆண்டுகளுக்கு முன்பு தலித் சமூகத்தைச் சேர்ந்த 10 பேரைக் கொலை செய்த வழக்கில் (murder case) 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றம் ரூ55,000 அபராதம் விதித்த நிலையில், அபராதத்தை கட்டத் தவறினால், ஆயுள் தண்டனையுடன் கூடுதலாக 13 மாதங்கள் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1981-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்திரபிரதேசத்தில், சத்பூர் என்ற கிராமத்தில் 10 பேர் கொலை செய்யப்பட்டனர். அதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக மெயின்புரி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பின்னர், அக்டோபர் 1989-ல் இந்த வழக்கின் விசாரணை மெயின்புரி கோர்ட்டில் தொடர்ந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு இந்த வழக்கு ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஒன்பது பேர் இறந்துவிட்டனர். உயிருடன் இருந்த ஒரே குற்றவாளியான கங்கா தயாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி ஹர்வீர் சிங் தீர்ப்பளித்துள்ளார்.