உத்தர பிரதேச மாநிலத்தில் ரயிலில் பயணம் செய்த பெண் போலீசை கொடூரமாக தாக்கிய நபரை காவல் துறையினர் அதிரடியாக என்கவுண்ட்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 30ம் தேதி அன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜ்சங்கம் வரை இயங்கி வரும் சரயு எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் போலீஸ் ஒருவர் பயணித்த போது மர்ம நபர் ஒருவர் அவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தினார்.
இதில் அந்த பெண்ணின் முகம், தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில், தற்போது அவர் நலமாக உள்ளார்.
இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, பெண் போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா.. என்ற கேள்வியையும் எழுப்பியது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் போலீசின் சகோதரர் இதுகுறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அயோத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய நபரை தீவிரமாக தேடிவந்தனர்.
அப்போது அனீஷ் கான் என்பவர் பெண் போலீசை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த சிறப்பு அதிரடி படையினர் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்ய முயன்ற போது அனிஷ் கானுடன் அங்கு 3 பேர் இருந்தனர்.
இந்நிலையில், போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதனால் தற்காப்புக்காக போலீசாரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் அனீஷ் கான், ஆசாத், விசாம்பர் தயால் உள்ளிட்ட 3 பேரும் குண்டுகாயமடந்ததை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அனீஷ் கான் உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரயிலில் பெண் போலீஸ் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய நபர் போலீசார் என்கவுண்ட்டரில் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு அம்மாநிலத்தில் உள்ள மற்ற ரவுடிகள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.